October 01, 2007

இராம.கோபாலன் சிறப்புப் பேட்டி

தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு வித்தியாசமான மாநிலம். நாட்டிலேயே இங்குதான் விண்ணை முட்டும் கோபுரத்துடன் உலகம் வியக்கும் பல்லாயிரம் கோயில்கள் உள்ளன. கேரளத்தில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கும், ஆந்திரத்தில் உள்ள திருப்பதிக்கும் தமிழர்கள்தான் லட்சணக்கில் படையெடுக்கிறார்கள். எவ்வித விளம்பரமும் இல்லாமல் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரமிக்காதவர்கள் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் நாத்திக சக்திகள் பேயாட்டம் ஆடுகின்றன. ராமனுக்கு இங்குதான் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டன. மாநிலத்தை ஆளும் முதல்வரே இந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கிறார். இந்து என்றால் திருடன் என்று ஏதோ பாரசீக மொழியில் இருப்பதாக கண்டுபிடித்து பிதற்றுகிறார். குங்குமம் வைத்தால் ரத்தம் வழிகிறது என்கிறார். ரம்ஜான் கஞ்சி குடித்துக் கொண்டே விநாயகர் கொளுக்கட்டை சாப்பிடுவாரா? என்று நக்கலடிக்கிறார். ராமன் என்று ஒருவன் இருந்தானா? என்றெல்லாம் இந்துக்களை ஏளனம் செய்கிறார்கள். இத்தனையும் கேட்டுக்கொண்டு இந்துக்கள் அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட தமிழகத்தில் நாத்திக சக்திகளை எதிர்த்துப் போராட எல்லோரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் துணிவுடன் ஓர் இயக்கம் பிறந்தது. அந்த இயக்கத்தின் பெயர் இந்து முன்னணி. இதனை ஆரம்பித்தவரின் பெயர் வீரத்துறவி இராம.கோபாலன். எந்த தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டதோ அதே தமிழகத்தில் ஊர்தோறும் இன்று விநாயகர் ஊர்வலங்கள் நடக்கிறது. இதற்கு இந்து முன்னணிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட இந்து முன்னமி தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த சாதனைகளின் பின்னணியில் இருப்பவர் அதன் நிறுவனர் இராம.கோபாலன். இவர் தமிழகத்தில் செல்லாத ஊர்கள் இல்லை. நடக்காத தெருக்கள் இல்லை. வரும் அக்டோபர் 3ம் தேதி 80 வயதை நிறைவு செய்யும் இவர் இப்போதும் மாதத்திற்கு 27 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். 1980ல் இஸ்லாமிய பயங்கரவாதி இவரை வெட்டினான். இதில் இராம.கோபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதன்பிறகும் அவர் தளர்ந்துவிடவில்லை. சொல்லப்போனால் அதன் பிறதுதான் அவர் பல சாதனைகளை நிகழ்த்தினார்.


3-10-2007 அன்று இராம.கோபாலன் 80 வயதை நிறைவு செய்கிறார். இந்த நேரத்தில் அவரது விரிவான பேட்டி எனது வலைப் பக்கத்தில் இடம் பெறுகிறது. இந்தப் பேட்டியில் இராம.கோபாலன் தன் இளமைக்காலம் முதல் பல சம்பவங்களை நினைவு கூர்கிறார். இந்து முன்னணியின் சாதனைகள், 60 ஆண்டுகால பொதுவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை அவர் இங்கே சொல்கிறார். இந்தப் பேட்டி வேறு எந்த இதழிழும் பிரசுரமாகவில்லை. எனது வலைப்பக்கத்திற்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி இது.



இராம.கோபாலன் - ஒரு சிறு அறிமுகம்

இராம.கோபாலன் இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரம் என்ற கிராமத்தில் 19-9-1927ல் பிறந்தார். இராம.கோபாலன் ஒரு சிறந்த கவிஞர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், நிர்வாகி என்பது பலருக்கு தெரியாது. அவர் எழுதிய பல பாடல்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இன்றும் பாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் ஷ்ரீ குருஜி கோல்வல்கர் பல முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அவரது ஆங்கில உரையை தமிழில் அதே சுரத்தில் மொழிபெயர்த்து அவரிடமே பாராட்டு பெற்றவர் இராம.கோபாலன். ஞான கங்கை போன்ற பல புத்தகங்களை அவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நாத்திக சக்திகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அவர் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இந்து இயக்கத் தலைவராக அறியப்படும் பிரபலமான நபர்களில் இராம.கோபாலன் மிக முக்கியமானவர்.

இனி அவருடனான சந்திப்பிலிருந்து....


உங்களது சொந்த ஊர் எது?

சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரம் தான் எனது சொந்த ஊர். அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்.

உங்களது குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?

எனது தந்தையார் பெயர் ராமசாமி. தாயார் செல்லம்மாள். என்னுடன் உடன் பிறந்தவர்கள் 11 பேர்.

அந்த 11 பேரின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

(கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் என்றவாறே யோசித்து சொல்கிறார்)1. சுப்பிரமணியன், 2. பாப்பாயி(சிறுவயதிலேயே மரணம்) அடைந்துவிட்டார்), 3. மங்களம், 4. சங்கரன், 5. நான் (இராம.கோபாலன்), 6. திரிபுரசுந்தரி, 7. கமலா, 8. லலிதா, 9. நடராஜன், 10. நாராயணன் (சிறுவயதிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டார்), 11. ஏகாம்பரம்.



உங்களது பள்ளிப்பருவம் பற்றி..?

நான் சீர்காழியில் உள்ள லூதரன் மிஷன் பள்ளியில்தான் படித்தேன்.

அதன்பிறகு...?

எனக்கு சிறுவயதில் இருந்தே பி.இ படித்து மிகப்பெரிய பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அதற்காக முயற்சித்துப் பார்த்தேன். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக அது நடக்காமல் போயிற்று. அதனால் நானும் எனது பி.இ ஆசையை மூட்டைக்கட்டி விட்டு சென்னை வேப்பேரியில் உள்ள சி.என்.டி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினீரியங் படிப்பில் சேர்ந்தேன். டிப்ளமோ முடித்து விட்டு ஏ.எம்.ஐ.இ படித்தால் அது பி.இ-க்கு சமம் என்று பலர் சொன்னதால் என் மனம் சமாதானம் அடைந்தது.

உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸோடு எப்போது தொடர்பு ஏற்பட்டது?

வேப்பேரி சி.என்.டி பாலிடெக்னிக்கில் என்னோடு படித்தவர் முத்து. முத்து மிகச்சிற்பபாக கிரிக்கெட் விளையாடுவார். எனக்கும் அப்போது கிரிக்கெட் மீது மோகம் இருந்தது. அதனால் முத்துவிடம் எனக்கு கிரிக்கெட் கற்றுத் தருமாறு கேட்டேன். சில நாட்கள் முத்துவும் நானும் கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் எனக்கு கிரிக்கெட் விளையாட வரவில்லை.
ஒரு நாள் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. நாளைக்கு விளையாடிக் கொள்ளலாம் என்று கூறி முத்து பாதியிலேயே கிளம்பிவிட்டார். அப்படி என்ன அவசர வேலை என்று நான் ஆவலுடன் கேட்டேன். நான் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவிற்குச் செல்ல வேண்டும் என்றார். நான் ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன? என்று கேட்டேன். என்னோடு வந்து நேரில் பார்த்துக்கொள் என்று நச்சென பதில் சொன்னார்.
முத்துவோடு நானும் கோபாலபுரத்தில்(இப்போது மைதானம் இருக்கும் இடம்) நடந்த ஷாகாவிற்குச் சென்றேன். ஒரு இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தோனோ அப்படி ஆர்.எஸ்.எஸ் இருந்தது. அதனால் நான் முதல் நாளே ஆர்.எஸ்.எஸ்ஸில் ஐக்கியமாகி விட்டேன். அதாவது கண்டதும் காதல் கொண்டேன்.
அந்த ஷாகாவை ராகவன் என்பவர் நடத்தி வந்தார். மகாராஷ்டிராவில் இருந்த ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்காக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரால் அனுப்பப்பட்ட திரு.சிவராம்ஜியும் அங்கு இருந்தார்.



எப்போது நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியராக வந்தீர்கள்?

1947ல் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் முடித்த பிறகு வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தத்தில் இருந்த நார்த் ஆற்காடு எலக்ட்ரிக்கல் சப்ளை கார்பபரேஷனில் எனக்கு ஜூனியர் என்ஜினியர் வேலை கிடைத்தது. அங்கு நான் வேலை பார்த்துக் கொண்டே குடியாத்தம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் ஷாகா ஆரம்பித்து நடத்தினேன். நான் ஆரம்பித்த முதல் ஷாகா இதுதான்.
நான் குடியாத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் வேலை செய்வதை பொறுக்காத கம்யூனிஸ்டுகள் " உங்கள் மகன் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை. ஆர்.எஸ்.எஸ் வேலைதான் செய்கிறான்" என் தந்தைக்கு கடிதம் எழுதினார்கள். இந்த கடிதத்தை கண்ட என் பெற்றோர் நீ வேலை பார்த்தது போதும் என்று என்னை சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர். அப்போது ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவிற்கு எதிரே எங்கள் வீடு இருந்தது. அதன் பிறகுதான் முழுநேர ஊழியராக வந்தேன்.



வீட்டைத் துறந்து, வேலையைத் துறந்து முழுநேரமாக ஆர்.எஸ்.எஸ் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் எற்பட்டது?

தேசப்பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் என் மனதில் ஆழ பதிந்திருந்தன். சொந்த நாட்டிலேயே இந்துக்கள் முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்டனர். கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இப்படி முஸ்லிம்களால் குடியிருந்த சொந்த வீட்டைத் துறந்து சொந்தபந்தங்களை பறிகொடுத்துவிட்டு வந்தவர்கள் அகதிகளாக சென்னையில் ஆவடியில் தங்கியிருந்தனர். இந்த கொடுமையான காட்சிகளை பார்த்து என் மனம் கொதித்தது. எப்படியாவது இந்த நிலையை மாற்ற வேண்டும். இனி இந்துக்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. இதற்கு சரியான இடம் ஆர்.எஸ்.எஸ்தான் என்று நான் உறுதியாக நம்பினேன். அதனால் ஆர்.எஸ்.எஸ்ஸிஸ் முழுநேர ஊழியராக என்னை இணைத்துக் கொண்டேன்.



ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக உங்கள் பணி எப்படி இருந்தது?

முழுநேர ஊழியராக நான் முதன்முதலில் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டேன். பிறகு பாலக்காடு தாலுக்கா அமைப்பாளராக அந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் வேலைகளைச் செய்தேன். திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர், 1965-ல் ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர், 1975-ல் ஆர்.எஸ்.எஸ் மாநில இணை அமைப்பாளர் என பல பொறுப்புகளில் நான் சமுதாயப் பணிகளை செய்து வந்தேன்.



இந்து முன்னணியை எப்போது ஆரம்பித்தீர்கள்? ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பொறுப்பில் இருந்த நீங்கள் புதிதாக ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பித்தீர்கள்?

மீனாட்சிபுரம் மதமாற்றம், கன்னியாகுமரி மாவட்டத்தை `கன்னி மேரி' மாவட்டமாக்க கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் இந்துக்களை முஸ்லிமாக மதமாற்ற நடந்த முயற்சி. சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விநாயகரை செருப்பால் அடித்து திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலம்.இது போன்று தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் உணர்வுள்ள இந்துக்களை உலுக்கிக் கொண்டிருந்தது. இந்த இழி நிலைமையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.
1980 பிப்ரவரியில் கரூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. இதில் மேற்கூறிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்கள் யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரிஜி,
சூர்யநாராயணராவ்ஜி ஆகியோர் தமிழகத்தில் நிலவிய இந்த அசாதாரணமான நிலையை மாற்ற ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்தனர். அதன்படி அந்த கரூர் கூட்டத்திலேயே `இந்து முன்னணி' என்கிற அமைப்பு துவங்கப்பட்டது. இதன் மாநில அமைப்பாளராக அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த நான் நியமிக்கப்பட்டேன். சில ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளர் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் என்று இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டேன்.



`இந்து முன்னணி' இன்று மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது. இது பற்றி கூறுங்களேன்?

இந்து முன்னணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டதும் இந்து முன்னணி என்றால் என்ன? நான் என்ன செய்யவேண்டும்? என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் யாதவராவ் ஜோஷியிடம் கேட்டேன். நீ வேலை செய்ய ஆரம்பி. என்ன வேலை என்று நீயே தெரிந்து கொள்வாய் என்று அவர் கூறினார்.
கரூர் கூட்டம் முடிந்ததும் பேருந்தில் நான் கன்னியாகுமரி சென்று பகவதி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன். கன்னியாகுமரி நகரில் வசித்த சிலரை நான் தங்கியிருந்த இடத்திற்கு வரச் சொன்னேன். அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது நான் கன்னியாகுமரி மாவட்டத்தை `கன்னிமேரி' மாவட்டமாக்க கிறிஸ்தவர்கள் முயற்சிப்பது தெரிய வந்தது. கிறிஸ்தவர்களின் இந்த சதியை முறியடிக்க வேண்டுமானால் `மக்கள் சக்தி' தேவை என்று முடிவுக்கு வந்தோம்.
முதலில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் செய்தேன். முக்கியமான எல்லா ஊர்களுக்கும் சென்றேன். பல தகவல்கள் கிடைத்தது. பல ஊர்களின் பெயர்களை மாற்றி கிறிஸ்தவ பெயர்களை சூட்டுகிறார்கள். சபரிமலைக்கு இந்துக்கள் மாலை போட்டால் கிறிஸ்தவர்கள் கேலி செய்கிறார்கள். விபூதி, குங்குமம், சந்தனம் வைத்துக் கொண்டு தெருவில் நடமாட முடியவில்லை என்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை சொன்னார்கள். இதனால் முதலில் குமரிமாவட்ட பிரச்சினைகளை `இந்து முன்னணி' எடுத்துக் கொண்டது.


கன்னியா குமரி மாவட்டமா?
கன்னி மேரி மாவட்டமா?
என்று நோட்டீஸ் அடித்து ஒட்டினோம்.
பலர் ஆதரித்தார்கள். பலர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஏன் கிறிஸ்தவர்களுக்கு இப்படி வழி காட்டுகிறீர்கள் என்று கேட்டனர்.பிறகு `கன்னிமேரி' மாவட்டப் பிரச்சினைகள் பற்றி பேச ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். இதில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில் குமரி மாவட்டத்தில் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு இந்து எழுச்சி மாநாடு நடத்துவது என முடிவு செய்தோம். மாநாட்டை 2 மாதத்திற்கு பிறகு நடத்துவது என்று முடிவு செய்தோம். பிறகு நான் சென்னைக்கு வந்துவிட்டோம். அப்போது மாநாட்டிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொன்னார்கள். ஒரு வாரம் கழித்து மாநாட்டிற்கு 25,000 பேர் வருவார்கள் என்று எனக்கு போன் செய்தார்கள். நான் எப்படி என்று கேட்டேன். குமரி மாவட்டத்தில் உள்ள கார், வேன், பஸ் எல்லாம் புக் ஆகிவிட்டது என்று சொன்னார்கள். அடுத்த வாரம் 50,000 பேர் வருவார்கள் என்று சொன்னார்கள். அதற்கடுத்தவாரம் மாநாட்டிற்கு 1 லட்சம் பேர் வருவார்கள் போலிருக்கிறது. எங்களுக்கு பயமாக இருக்கிறது நீங்கள் வாருங்கள் என்றார்கள். நான் சென்றேன். நாகர்கோயிலில் 1982ல் நடந்த இந்த மாநாட்டில் ஓன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள் மதுரை ஆதினம், ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ரங்கசாமித் தேவர், ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் சூர்யநாராயணராவ், முன்னாள் எம்.பி தாணுலிங்க நாடார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.


இந்த மாநாட்டில் இந்துக்கள் அனைவரும் விபூதி, குங்குமம், சந்தனம் போன்ற மதச்சின்னங்களை தைரியமாக அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநாட்டிற்கு பிறகு விபூதி, குங்குமம், சந்தனம் வைத்திருப்பவர்களை எல்லாம் இந்து முன்னணியா? என்று கேட்க ஆரம்பித்தனர். இல்லை, இல்லை என்று இரண்டு மூன்று முறை சொல்லி பார்த்தவர்கள் கடைசியில் ஆமாம் நாங்கள் இந்து முன்னணிதான் என்று கூறிவிட்டார்கள். இப்படி தான் இந்து முன்னணி வளர்ந்தது.

இந்த மாநாட்டின் விளைவுகள் எப்படி இருந்தது?

1982 இந்து எழுச்சி மாநாட்டிற்கு பிறகு குமரி மாவட்டத்தில் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. `இந்து முன்னணி' போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி பல போராட்டங்களை இந்து முன்னணி வெற்றிகரமாக நடத்தியது. நாகர் கோயிலில் நடந்த இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறுவோம் என இந்து முன்னணி அறிவித்தது. தடையை மீறினால் துப்பாக்கியால் சுடுவோம் என போலீசார் துப்பாக்கியை நீட்டினர். அரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஒரு இளைஞன் சட்டையை கழற்றி தனது நெஞ்சைக் காட்டி போலீசை பார்த்து சுடு என்றான்.
போலீசார் ஈவு இரக்கமின்றி சுட்டதில் அந்த இளைஞன் இறந்தான். பிறகு போலீஸார் தடுப்பைமீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. பலர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த பாளையங்கோட்டை சிறைவாசம் இந்து முன்னணிக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது. அப்போது நானும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். சிறைச்சாலையே பயிற்சி முகாமாக மாறியது. உடற்பயிற்சிகள், சொற்பொழிவுகள், கதைகள் என பொழுது கழிந்தது.
குமரிக்கு பிறகு கோவையில் இந்து முன்னணியின் பணி துவக்கப்பட்டது. கோவையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளது குறித்து இந்து முன்னணி பலமுறை எச்சரித்தது. இருந்தாலும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கோவையில் வீரகணேஷ், வீரசிவா போன்ற பலரை இந்து முன்னணி பலி கொடுத்தது. கோவையில்தான் முதன் முதலில் ஜிகாத் கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் எல்லா அரசியல் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களும் கலந்து கொண்டனர்.

உங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் தலையில் ஏற்பட்ட படுகாயத்தின் வடுவை மறைப்பதற்காகவே நீங்கள் காவி துணியை தொப்பி போல அணிகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா? உங்கள் மீதான தாக்குதல் பற்றி சொல்லுங்களேன்?

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். 1984ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி கோவையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு ராஜபாளையம் செல்வதற்காக மதுரைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். பாட்சா (கோவை குண்டு வெடிப்பபிற்கு காரணமான அதே பாட்சாதான்) உள்ளிட்ட மூவர் நான் வந்த பெட்டியை கண்காணித்து தேடியிருக்கிறார்கள். மதுரையில் நான் இறங்கியதும் பின்னால் வந்துஎன்னை சராமாரியாக வெட்டிவிட்டு பார்சல் அலுவலகத்தில் சென்று ஒளிந்து கொண்டனர்.
அப்போது தனது மகனை வழியனுப்புவதற்கு வந்திருந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மருத்துவர் நான் வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்தார். போலீசுக்கு போன் செய்து இன்னும் 15 நிமிடத்திற்குள் இராம.கோபாலனை மருத்துவமனைக்கு நீங்கள் கொண்டு வராவிட்டால் நான் போலீஸ் மீது வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார். உடனே போலீசார் என்னை ஆம்புலன்ஸில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். மருத்துவமனையில் எனக்கு ரத்தம் கொடுப்பதற்காக மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். என் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடந்தது.ராஜபாளையத்தில் கடையடைப்பு நடந்த நேரத்தில் ஒருவர் கடைக்கு வந்து சிகரெட்டு கேட்டார். இன்று பந்த் அதனால் கடையை திறக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். எதற்காக பந்த்? என்று சிகரெட் கேட்டவர் கேட்க, `இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலனை முஸ்லிம் பயங்கரவாதிகள் வெட்டிவிட்டார்கள் அதனைக் கண்டித்து பந்த்' என்றார் கடைக்காரர். இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி பந்த் நடத்தியபோது கூட நீங்கள் கடையை மூடவில்லையே என்று கேட்க கடைக்காரர் கோபமாக அவரை திட்டி அனுப்பினார். இந்த சம்பவம் இந்து முன்னணியின் வளர்ச்சியைக் காட்டுகிறது.



இந்து முன்னணியின் சாதனைகள் சிலவற்றை கூற முடியுமா?

ஓடாத திருவாரூர் ஆழித்தேரை ஓடச் செய்தது, மண்டைக்காடு கலவரத்தின்போது இந்துக்களுக்காக பாடுபட்டது, மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் போது அதை நாடு தழுவிய பிரச்சினையாக்கி மதமாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமியை பிரதிஷ்டை செய்தது. தமிழகம் முழுவதும் இந்து எழுச்சி மாநாடுகளை நடத்தி தமிழகத்தில் மாபெறும் இந்து எழுச்சியை உண்டாக்கியது. எந்த தமிழகத்தில் விநாயகர் சிலைகளை உடைத்தார்களோ அதே தமிழக்ததில் வீதிதோறும் விநாயகர் சிலைகளை வலம் வரச் செய்தது என இந்து முன்னணியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒன்றிரண்டை விளக்கமாக சொல்ல முடியுமா?

ஓடாத திருவாரூர் தேர் ஓடியது

திருவாரூர் தேர் தமிழகத்தில் மிகப்பெரிய தேர். இதற்கு ஆழித்தேர் என்று பெயர். இந்த தேர் வலம் வர ஆரம்பித்தால் முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும். வழிவலம் தேசிகர், மூப்பனார், வி.எஸ்.தியாகராஜ முதலியார் போன்ற பண்ணையார்கள் தங்கள் பண்ணையில் வேலை செய்பவர்களைக் கொண்டு தேரை இழுப்பார்கள். அவர்கள் ஆட்களை அனுப்ப மறுத்துவிடவே திருவாரூர் தேர் 9 வருடங்கள் நடக்காமல் நின்று போனது.
இதுபற்றி அறநிலைத்துறையிடம் விசாரித்தால் தேர் இழுக்க அதிகமாக ஆட்கள் தேவை. அவ்வளவு மக்களை திரட்ட முடியாது என்று காரணம் சொன்னார்கள். உடனே இந்து முன்னணி களத்தில் குதித்தது. திருவாரூர் தேர்திருவிழா நடத்துவது சம்பந்தமாக நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 1,000 நபர்களுக்கு போஸ்ட் கார்டு அனுப்பப்பட்டது. 150 பேர் கலந்து கொண்டனர். இதில் நானும் கலந்து கொண்டேன். இவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தோம். தேர் இழுக்கும் பொறுப்பை இந்து முன்னணி ஏற்பதாக கூறியது. அரசும் தேர்த்திருவிழாவை நடத்த ஒப்புக் கொண்டது.
தேர் திருவிழாவிற்கு 10 நாட்கள் முன்னதாக 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அரிஜன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அரிஜன மக்களை தேர் திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இந்து முன்னணி இளைஞர்கள் அரிஜன பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த முயற்சியால் பல லட்சக்கணக்கான மக்கள் தேர்திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

மண்டைக்காடு கலவரம்

குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள ஷ்ரீபகவதி அம்மன் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆலயம். ஆண்கள் எப்படி மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார்களோ, அதுபோல் பெண்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து பகவதி அம்மன் கோயிலுக்கு செல்வார்கள். கோயிலுக்கு செல்வதற்கு முன் பெண்கள் கடலில் நீராடுவது வழக்கம்.
கிறிஸ்தவ பாதிரிகள் பெண்களிடையே இந்துமத நம்பிக்கையை வளர்க்கும் இந்த விழாவில் கலவரம் செய்ய திட்டமிட்டனர். கிறிஸ்தவ மீனவர்களை தூண்டிவிட்டு கடலில் நீராட வந்த பெண்களின் ஆடைகளை எடுத்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்த திட்டமிட்டனர். பல இந்துப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். இதனை பார்த்து கொதித்தெழுந்த இந்துக்கள் அலங்காரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருந்த துணிகளை கிழித்து இந்து தாய்மார்களின் மானத்தை காப்பாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இந்துக்களை தாக்கி கலவரம் செய்தனர். இதனால் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 9 கிறிஸ்தவ மீனவர்கள் குண்டடிப்பட்டு இறந்தனர்.
இந்த 9 பேர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு ஊர்வலம் போக கிறிஸ்தவ பாதிரிகள் திட்டமிட்டனர். இதற்கு இம்மானுவேல் ஹரிஹரானே என்ற கிறிஸ்தவ போலீஸ் அதிகாரி (டி.எஸ்.பி) அனுமதி தந்ததோடு கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பும் தந்தார். ஊர்வலம் சென்றபோது வழிகளில் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு இந்துக்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூண்டது. இதனால் ஊர்வலம் பாதியிலேயே தடைசெய்யப்பட்டது. பொதுமக்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.
காங்கிரசில் இருந்த தாணுலிங்க நாடார் ஒரு கோஷத்தை அப்போது முன் வைத்தார். கிறிஸ்தவ நாடார் என்று சொல்வது சூடான ஐஸ்கிரீம் என்று சொல்வது போல. இவர்தான் ஜாதிக்கு வாலையும், மதத்திற்கு தலையையும் கொடுத்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் சதியை முறியடித்தார்.இந்த கலவரத்தின் மூலம் சில விஷயங்கள் அம்பலத்திற்கு வந்தன.கிறிஸ்தவ மீனவர்கள் பாதிரிகளின் தூண்டுதலால் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இந்து நாடார்களை தாக்க, கிறிஸ்தவ மீனவர்களுக்கு கிறிஸ்தவ நாடார்கள் உதவுகிறார்கள். இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது.
இந்துக்கள் நடத்தி வந்த சிறு சிறு தேங்காய் நார் தொழிற்சாலைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. வீட்டில் கட்டியிருந்த பசுக்களை உயிரோடு கொளுத்தினார்கள்.இதற்கு முன் கிறிஸ்தவர்கள் செக்காலியர் என்ற வாணிபரை தாக்கினார்கள். அப்போது வாணிபரைத்தானே தாக்குகிறார்கள் என்று இந்துக்கள் அமைதி காத்தனர். பிறகு பிள்ளைமாரை தாக்கினார்கள். அப்போதும் அதே அமைதிதான். மண்டைகாடு கலவரத்திற்கு பிறகு தாக்குதலுக்கு உள்ளாவது இந்துக்கள்தான் என்பதனை இந்துக்கள் புரிந்து கொண்டனர்.
நேசமணி - இவர் காங்கிரஸில் கிறிஸ்தவ ஆதிக்கத்தை கொண்டு வந்த கிறிஸ்தவர். இவரை எதிர்த்து காங்கிரஸில் கிறிஸ்தவ ஆதிக்கத்தை தடுத்தவர் அதே காங்கிரஸில் இருந்த தாணுலிங்க நாடார். இவர்தான் குமரி மாவட்டத்தில் இந்து எழுச்சி ஏற்பட காரணமாக இருந்தார். பின்னாளில் இவர் இந்து முன்னணியின் மாநில தலைவராகி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட பாடுபட்டார்.

மீனாட்சிபுரம் மதமாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 1,000 அரிஜன இந்துக்களை முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டனர். இரவோடு இரவாக மீனாட்சிபுரம் என்ற கிராமத்தின் பெயரையே ரகமத் நகர் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டனர். இந்த மதமாற்ற விழாவில் இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றிய செய்தி `இந்தியன் எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட சில பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியாகி இருந்தது. இதனை பார்த்த சிலர் ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்பு கொண்டனர். இல.கணேசனும்(இல.கணேசன் அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மதுரை கோட்ட அமைப்பாளராக இருந்தார்) நானும் சிலருடன் மீனாட்சிபுரம் சென்று நிலைமையை நேரில் ஆராய்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தகவல் கொடுத்தோம். இதன் விளைவாக மீனாட்சிபுரம் பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறி நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மீனாட்சிபுரம் மதம்மாற்றம் பற்றி அறிந்து வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாயை மீனாட்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தார். பிரதமர் இந்திராகாந்தி மதமாற்றத்தைதை விரும்பவில்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் எச்.வி.சேஷாத்ரிஜி எழுதிய `மீனாட்சிபுரம் எச்சரிக்கிறது' என்ற சிறு புத்தகம் பல மொழியில் லட்சக்கணக்கில் விற்றது. மீனாட்சிபுரம் மதமாற்றத்தை நாட்டு மக்களின் கவனத்திற்கு ஆர்.எஸ்.எஸ் கொண்டு சென்றதால் மதமாற்றத்தின் கொடூரத்தை மக்கள் உணர ஆரம்பித்தனர்.

ராமநாதபுரம் தப்பியது

மீனாட்சிபுரம் போலவே ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஒரு லட்சம் இந்துக்களை முஸ்லிமாக மதம்மாற்ற மிகப்பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் பட்டியல் எடுத்து முதலில் அவர்களை மதம் மாற்றத் தொடங்கினார்கள். இந்தத் தகவல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூலம் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் சூர்யமாராயணராவ் அவர்களுக்கு கிடைத்தது. மீனாட்சிபுரம் மதமாற்றம் போலவே ராமநாதபுரம் மதமாற்ற பிரச்சினையும் நாடு முழுக்க கொண்டு செல்லப்பட்டது.
முஸ்லிமாக மதமாற்றுவதற்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அரிஜன சாமியார் ராம்தாஸ் சுவாமிகளை முஸ்லிம்களை அழைத்திருந்தனர். ராம்தாஸ் சுவாமிகள் மலேசியாவில் குடியேறியவர். ராமதாஸ் சுவாமிகளை சூரியமாராயணராவும் நானும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சந்தித்து முஸ்லிம் மதமாற்றத்தின் பயங்கரத்தை எடுத்துக் கூறினோம். முஸ்லிமாக மதம்மாறு என்று கூற வந்த ராம்தாஸ் சுவாமிகள் அரிஜன மக்கள் யாரும் இந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்கு மாற கூடாது என்று மக்களிடையே பேசினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த முயற்சியால் ராமநாதபுரம் தப்பியது.

ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த போதும் சரி. இந்து முன்னணியில் இருந்த போதும் சரி நீங்கள் தமிழகம் முழுவதும் பல முறை சுற்றுப்பயணம் செய்திருப்பீர்கள். இப்போதும் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். உங்கள் சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் சிலவற்றை சொல்ல முடியுமா?

1948ல் இருந்து தமிழகத்தில் மாதம் 27 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவங்கள். எதைச் சொல்வது?
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அரிஜன மக்களுக்கு எதிரானது என்று கம்யூனிஸ்டுகளும், திராவிட இயக்கத்தினரும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அரிஜன மக்களோடு ஆர்.எஸ்.எஸ் நெருக்கமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸில் அரிஜன சமுதாயத்தை சேர்ந்தவர்களில் பலர் முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர்.
நான் ஒருமுறை ஆர்.எஸ்.எஸ்ஸின் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வந்தவாசி சென்றிருந்தேன். அப்போது ஒரு அரிஜன சகோதரர் வீட்டில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அவர்கள் வீட்டில் தங்கப்போகிறேன் என்பதற்காக அவர்கள் வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்திருந்தனர். அசைவ உணவு சமைத்த பாத்திரங்களை தீயில் காட்டி தூய்மை படுத்தினார்கள்.
நான் அந்த அரிஜன சகோதரர் வீட்டில் தாய்மார்கள் பரிமாற உணவருந்தினேன். பூஜைகள் செய்தேன். நான் சாப்பிடும் போது போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தனர். ஏன் இத்தனை போட்டோ எடுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இராம.கோபாலன் போன்ற ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினர் அரிஜன மக்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள் என்ற குற்றம் சுமத்தியவர்களிடம் காட்டுவதற்காகவே இத்தனை போட்டோ என்றார்கள்.
நான் அந்த அரிஜன சகோதரர் வீட்டிற்கு வந்ததற்கு அந்த பகுதியில் உள்ள சில அரிஜன அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்புகொடி காட்டப்போவதாக அறிவித்தனர். டி.எஸ்.பி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் பசு மாமிசம் சாப்பிடுபவர்கள். இராம.கோபாலன் பசுவை வணங்குபவர் என்றெல்லாம் வாதம் செய்தனர். இறுதியாக நான் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்தவர்களின் உறுதியால் எதிர்த்தவர்கள் அமைதியானார்கள். அரிஜன மக்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை புரிந்து கொண்ட பிறகு எல்லா இடங்களிலும் ஆதரிக்கவே செய்தார்கள்.
சிதம்பரத்தில் இந்து முன்னணி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக நான் சென்றிருந்தேன். கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இராம.கோபாலன் இன்று அரிஜன சகோதரர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் வந்துள்ளார் என்று பேசினார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் அரிஜன மக்களின் இல்லங்களில் சாப்பிடுவது ஆச்சரியமான விஷயம் என்றாலும்நான் பேசும்போது இதற்கு பதிலளித்தேன்.
"நான் அரிஜன சகோதரர் வீட்டில் சாப்பிட்டதாக சொன்னார்கள். நான் சாப்பிட்டது பெரிய விஷயமல்ல. எனக்கு அவர்கள் சாப்பாடு போட்டார்களே அதுதான் பெரிய விஷயம் என்றார். குளத்தில் ஆடு குளிப்பாட்டலாம், மாடு குளிப்பாட்டலாம், அழுக்குத் துணிகல் அலசலாம் ஆனால் அரிஜன மக்கள் குளிக்கக்கூடாது என்றெல்லாம் அவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவர்கள் இன்றும் இந்துவாக வாழ்கிறார்கள். நான் யார் காலிலாவது விழ வேண்டும் என்றால் அரிஜன மக்களின் காலில்தான் விழுவேன் என்றார். அரிஜன மக்களை பொறுத்தவரை இந்து இயக்கங்களின் நிலைபாடுதான்.
இந்து முன்னணி துவக்கப்பட்ட புதிதில் நாகர் கோயிலில் உள்ள தாணுலிங்க நாடார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வீட்டில் அவர் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் தாணுலிங்க நாடார் மனைவியிடம் சாப்பாடு அருமை என்று பாராட்டு தெரிவித்தேன். அதற்கு அந்த அம்மையார் எங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் சாப்பிட்டீர்கள் என்றார். இது போன்று பல அனுபவங்கள் உள்ளது.



நீங்கள் எதிர்முகாமில் உள்ள கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பல தலைவர்களை சந்தித்தாக கேள்விப்பட்டோம். அந்த சந்திப்புகள் பற்றி கூற முடியுமா?

ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த ஷ்ரீ ரஜ்ஜூபையாஜி(ராஜேந்திர சிங்) ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும், அமைப்பினரையும் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஷ்ரீ ரஜ்ஜூபையாஜியின் இந்த வேண்டுகோளை ஏற்று நான் மு.கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், மூப்பனார், தமிழ்குடிமகன்,. திருமாவளவன், தி.க.தலைவர் வீரமணி, ஜி.கே.வாசன், வாழப்பாடி இராமமூர்த்தி, ஆற்காடு வீராசாமி போன்ற பல கட்சித் தலைவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தேன்.

ஜெயலலிதா


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரை மூன்றுமுறை சந்தித்துள்ளேன். ஒருமுறை போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டில். மற்ற இருமுறையும் தலைமை செயலகத்தில். விருந்தினர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். போயஸ் கார்டனுக்கு நான் சென்றபோது என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அன்போடு கேட்டு உபசரித்தார். உங்கள் வீட்டில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தது, செருப்புகள் இருந்தது என்று உங்களை கைது செய்தபோது சொன்னார்கள். ஆனால் உங்கள் வீட்டில் 1 லட்சம் புத்தகங்கள் இருக்கிறது. அத்தனையையும் படித்து டிக் செய்துள்ளீர்கள். யாரும் டி.வி.யில் காட்டவில்லையே என்று நான் கேட்டபோது ஜெயலலிதா மெல்ல சிரித்தார்.
`நீங்கள் ஒரு சப்ஜெக்டை பற்றி பேசும்போது அது பற்றிய எல்லா தகவல்களையும் படித்துவிட்டுதான் பேசுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா?' என்று நான் கேட்டபோது ஜெயலலிதா `ஆமாம்' என்றார்.மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்த போது ஜெயலலிதாவை பாராட்டி 32 விநாயகர் உருவங்கள் அடங்கிய படத்தை ஜெயலலிதாவிடம் கொடுத்தோம். இந்த சந்திப்பு தலைமை செயலகத்தில் நடந்தது. நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டியது எங்கள் கடமை என்று நான் கூறிய போது ஜெயலலிதா மகிழ்ச்சியோடு சிரித்தார்.


கருணாநிதி

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்படும் முன் இல.கணேசன், சோ போன்றவர்கள் கருணாநிதியை சந்திக்கும்போது நீங்கள் ஏன் இராம.கோபாலனை சந்திக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.அதற்கு கருணாநிதி, "நான் அவரை சந்திக்க மறுக்கவில்லை. எப்போதும் அவரை சந்திக்க தயாராகவே இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். பிறகு கருணாநிதியை அவரது இல்லத்தில் நான் சந்தித்தேன்.
`நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தை விமரிசித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?' என்று கருணாநிதியிடம் நேரிடையாகவே கேட்டேன். மவுனமான சிரிப்பே கருணாநிதியிடம் இருந்து பதிலாக வந்தது.
`இந்து விரோதி கருணாநிதி' என்ற இந்து முன்னணி வெளியிட்ட சிறு புத்தகத்தை கருணாநிதியிடம் நான் கொடுத்தேன். மதுரையில் நடந்த கிராம கோயில் பூஜாரிகள் மாநாட்டிற்கு கருணாநிதி வந்திருந்தார். அவர் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வரும்போது இராம.கோபாலன் வந்திருப்பதாக ஒருவர் கூற அவர் சிறிது நேரம் நின்றார். நான் அவர் அருகே வந்ததும் `நீங்களும் இங்கே இருந்தீர்களா?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நீங்கள் நன்றாக பேசினீர்கள் என்று நான் பாராட்டினேன்.

மூப்பனார்

மூப்பனாரை நான் ரயில் நிலையங்களில் பலமுறை சந்தித்துள்ளேன். சேலம் ரயில் நிலையத்தில் ஒரு முறை என்னை பார்த்ததும் மூப்பனார் தன் அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டார். ஒரு ஐந்து நிமிடம் கடந்ததும் நான் உங்களோடு உட்கார்ந்திருந்தால் பி.ஜே.பிக்கும் த.மா.காவுக்கும் கூட்டணி என்று பேசுவார்கள். உங்கள் மீது ஒரு பழி விழ நான் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் டின் ஒன்றை தன் உதவியாளர் மூலம் ரயில் பெட்டியில் இருந்த எனக்கு கொடுத்து அனுப்பினார் மூப்பனார். மூப்பனார் உடல்நிலை சரியில்லாமல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருக்கும்போது அவரை நான் சந்திக்க சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு நா தளுதளுத்தது. விபூதி பூசிவிடச் சொன்னார். நானும் விபூதி பூசிவிட்டேன். மூப்பனார் மறைந்த போது அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.



திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் என்னை ஒருமுறை சந்தித்தார். நானும் அவரும் அன்போடு பேசிக் கொண்டிருந்தோம். இருவரும் பொதுவான விஷயங்களை பற்றி பேசினோம்.கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தை பார்வையிட சென்றிருந்த போது அங்கு நான் வந்திருப்பதாக கேள்விபட்டு திருமாவளவன் என்னைச் சந்தித்தார்.வட இந்தியாவில் எதிரும் புதிருமாக உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கூட வெளியில் பார்த்துக் கொண்டால் கை குலுக்கி கொள்கிறார்கள். தமிழகத்தில்தான் இது அபூர்வம் என்று நான் கூறியதற்கு திருமாவளவன் சிரித்தார்.

வீரமணி

திராவிடக் கழக தலைவர் வீரமணியை நான் ஒருமுறை ரயிலில் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். நான் உங்களை மாற்ற முடியாது. நீங்கள் என்னை மாற்ற முடியாது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என வீரமணி கூற நானும் மகிழ்ச்சியோடு இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றேன். வீரமணி இந்து முன்னணி வெளியீடுகள் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துவிட்டு தி.க. வெளியீடுகள் பற்றி என்னிடம் கூறினார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாசையும் நான் சந்தித்தேன். இருவரும் சகஜமாக பொதுவான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பழகுவதற்கு டாக்டர் இராமதாஸ் மிகவும் இனிமையானவர்




வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை ஒருமுறை சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். ஷ்ரீவில்லிபுத்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவின்போதும் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

வாழப்பாடி இராமமூர்த்தி

வாழப்பாடி இராமமூர்த்திஎன்னைச் சந்தித்த போது நான் என் சொந்த ஊரில் காளியம்மன் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். பழகுவதற்கு இனிமையானவர், அன்பானவர் வாழப்பாடி இராமமூர்த்தி.

தமிழ்குடிமகன்

தமிழ்குடிமகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்தித்தேன். அப்போது தமிழ்குடிமகன் உறங்கி கொண்டிருந்தார். அவரது மனைவியிடம் விபூதி, குங்கும பிரசாதத்தை கொடுத்து இது கோயில் பிரசாதம் அவருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ இருந்தாலும் நான் கொடுத்ததாகச் சொல்லி கொடுங்கள் என்று சொல்லி கொடுத்தேன். அவர் மனைவி நான் அவருக்கு இட்டு விடுகிறேன் என்று சொல்லி நான் கொடுத்த பிரசாதத்தை மகிழ்ச்சியோடு பெற்று கொண்டார்.

ரஜினிகாந்த்

கோவை குண்டுவெடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் இந்த குண்டுவெடிப்பிற்கு இந்துக்கள்தான் காரணம் என்று கூறியிருந்தார். இதனைக் கண்டித்து விவரம் தெரிந்தால் பேச வேண்டும். இல்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் அறிக்கை விட்டிருந்தேன். பிறகு ரஜினியை சந்திக்க நான் தேதி கேட்க அவரும் இசைந்தார். ரஜினி வீட்டில் இருவரும் சந்தித்தோம். அன்போடு வரவேற்று உபசரித்தார். வீட்டின் பூஜையறைகளை காட்டினார். காலில் விழுந்து ஆசி பெற்றார். மனைவியை அறிமுகப்படுத்தினார். கோவையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆதாரங்களை காட்டியதும், `அப்படியா? எனக்குத் தெரியாதே' என்று கேட்டுக் கொண்டார்.


முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?

முஸ்லிம் லீக் தலைவர்களை நான் சந்திக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தேசத்தை இரு துண்டாக பிளந்து இரத்தம் சொட்டுவதற்கு காரணமான முஸ்லிம் லீக் கட்சியினரை நான் சந்திக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டேன். மேலும் முஸ்லிம்லீக் முஸ்லிம்கள் பிரதிநிதி அல்ல. முஸ்லிம்களின் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்த நான் தயார் என்றும் அறிவித்தேன்.
கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் தினகரன் ஒருமுறை என்னை சந்திக்க ஒருவரை தூதுவிட்டார். அவர் வந்தால் காலை வெட்டிவிடுவேன் என்று சொன்னதாக கூறிவிடுங்கள் என்று தூது வந்த நபரிடம் கூறி அனுப்பி விட்டேன்.
தினகரன் வந்தால் எல்லா டி.வி., பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுத்துவிடுவார். ஒரு கையில் சூட்கேஸோடு வருவார். போகும்போது ஒரு கையில் சூட்கேஸ் மற்றொரு கையை உயர்த்தி வெற்றி சின்னம் காட்டுவார். இதனை பார்ப்பவர்கள் நான் பணம் வாங்கிவிட்டதாக கூறுவார்கள். அதற்காகவே அப்படி கூறி அனுப்பி விட்டேன்.

சந்திப்பு : புதுவை சரவணன்

7 comments:

Anonymous said...

நல்ல பதிவு. நல்ல முயற்சி. கோபால்ஜிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள். தமிழகத்தில் இந்துக்களை கௌரவத்துடன் வாழ வழிகாட்டியவர் கோபால்ஜி என்றால் மிகை இல்லை. அவரது முயற்சிக்கு அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன். அவருக்கு இறைவன் என்றென்றும் துனை இருப்பானாக. ஜெயக்குமார்.

ஜயராமன் said...

சரவணன் அய்யா,

மிக அற்புதமான விவரமான இந்த பேட்டிக்கு நன்றி. பல முன் அறிந்திராத தகவல்களை நம் மதிப்பிற்குரிய வீரத்துறவி கோபாலன்ஜி பற்றி தெரிந்துகொண்டேன். இன்று இந்துக்கள் கொஞ்சம் தன்மானத்துடன் தமிழ்நாட்டில் நடமாட முடிகிறது என்றால் அதற்கு கோபாலன்ஜி போன்ற தியாகிகள் தான் காரணம்.

இரண்டு வருஷம் முன்பு அவரை சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் பார்த்தேன். அப்போதே அவர் இராமர் பாலம் காக்க இயக்கம் நடத்திக்கொண்டிருந்தார். யாரும் அந்த பிரச்சனையை கொஞ்சமும் யோசித்திராத போதும் அவர் தீர்க்கதரிசனத்துடன் இந்துக்களின் நலன்களை முன்னிட்டு அந்த இயக்கம் நடத்தியதும், இன்று அந்த இயக்கம் மிகப்பெரும் ஒரு அரசியல் உத்வேகத்துடன் எழுந்து நிற்கிறது என்றால் அதற்கு கோபாலன்ஜி அவர்கள் போட்ட ஒரு அஸ்திவாரம்தான் முழுமுதல் காரணம் என்று நான் கருதுகிறேன். இறைவன் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்திக்கிறேன்.

நன்றி

Anonymous said...

சரவணன்

ஸ்ரீ.ராமகோபாலன் அவர்களின் சிறப்பான பேட்டியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. ராமகோபாலன் அவர்களது வீடியோ பேட்டி குமுதம்.காம் மில் இருக்கிறது, அனைவரும் கேட்க்க வேண்டிய பேச்சு. இந்து மதத்தைக் காக்க தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வரும் ராமகோபாலன் அவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். அவரது தியாகமும் நெஞ்சுரமும் போற்றுதலுக்க்குரியவை

அன்புடன்
ச.திருமலை

வெ.சா said...

அன்புள்ள சரவணன், இது தான் முதல் தடவையாக ராம கோபாலனின் பேட்டி ஒன்றை நான் படிப்பது. மிக விரிவாக, பல விஷயங்களைத் தொட்டு ஒரு முழுமையான சித்திரத்தை அவரைப்பற்றித் தருகிறது. நன்றி. சிந்தனையில் நீங்கள் எழுதுவதைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவை எனக்கு பல புதிய, பயனுள்ள விஷயங்களைத் தருகின்றன. சிந்தனையால் நான் பெறும் பயன்களில் இதுவும் ஒன்று. உங்களைப் போல பலரின் பங்கேற்பு எனக்கு பல புதிய விஷயங்களைக் கற்றுத் தருகிறது. வெறும் வார்த்தைகளாகச் சொல்லவில்லை. அன்புடன் வெ.சா.

மறந்து விட்டேன். இது வேறு எங்கும் பிரசுரமாகவில்லை என்கிறீர்கள். இதை, அக்கறை உள்ள என் நண்பர்களுக்கு உங்கள் ப்ளாக் இணைப்பைத் தந்து அனுப்பி வைக்கலாமா? அவர்கள் இதை அறியும் வேறு வாய்ப்பு இல்லாது போவதால் தான் கேட்கிறேன். வெ.சா.

புதுவை சரவணன் said...

அன்புள்ள வெ.சா அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் பாராட்டுக்கு தலைவணங்கிறேன்.திரு.இராம.கோபாலனின் பேட்டி அவசியம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அதனால் பேட்டியை படிக்க என் பிளாக்கிற்கு தாராளமாக லிங்க் கொடுக்கலாம்.

Anonymous said...

புதுவை சரவணன்,
தங்கள் முயற்சிக்கும்,
பேட்டியை வெளியிட்டமைக்கும் மிக நன்றி.வீரத்துறவி இராம கோபாலனுக்கு
எனது நமஸ்காரங்கள்.

வீரத்துறவி மிக நீண்ட ஆயுள் பெற்று
இந்துக்களை தலை நிமிர வாழச் செய்ய
வேண்டும் என இறைவனிடம் பிராத்தித்து கொள்கிறேன்.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

Sri Srinivasan V said...

Dear SARAVANAN,
Namaskarams,
Searching something I found your post today and spent the several hours today.
I read your posts, with a HEAVY Heart.
I am from Palayavalam in Tiruvarur-Tanjore district.
All your writings are THOUGHT provoking and Very straight forward.
I have a lot to say.
I prefer to PRAY.
God Bless you.
Your post on Gopalji was good.
THANKS for all your efforts.
Vanakkam.
Regards.
Srinivasan.
Perth, Australia.